Glimpses Tamil – Foreword by Sri. Aswinikumar

ஒரு மகா யோகியின் தரிசனங்கள்

File for Download – Anburai–Preface to Tamil Glimpses by Aswinikumar

அன்புரை

த. கு. அஸ்வினிகுமார்

[“ஒரு மகாயோகியின் தரிசனங்கள்” என்ற ஆங்கில மூலநூலின் தமிழ் மொழிபெயர்ப்பிற்கு “அன்புரை” வழங்கியுள்ள திரு த. கு.  அஸ்வினி குமார் சென்னை மற்றும் புதுச்சேரி அகில இந்திய ரேடியோ மற்றும் தூரதர்ஷன் நிலையங்களில் இயக்குனராக பணிபுரிந்தவர். அவர் புகழ்மிக்க தமிழ் எழுத்தாளர் மற்றும் நாவலாசிரியர் திரு த. நா. குமாரசாமியின் மகன் ஆவர். அவர் வானொலியில் பணியாற்றுகின்ற காலத்தில் இந்த சாதூவிற்கு உரைகள் நிகழ்த்தவும், குருநாதர் யோகி ராம்சுரத்குமார் பற்றி பலமுறை பேசவும் வாய்ப்புகள் ஏற்படுத்தி தந்துள்ளார். ஒவ்வொரு முறையும் இந்த சாது வானொலியில் உரை நிகழ்த்தும் பொழுது அந்த தகவலை குருநாதர் யோகிராம்சுரத்குமார் அவர்களுக்கு தெரிவித்து, பகவான், திருவண்ணாமலை உடுப்பி பிருந்தாவன் உரிமையாளர் திரு ராமச்சந்திர உபாத்யாயா மூலமாக ஒரு டிரான்சிஸ்டர் ரேடியோ வரவழைத்து , அதில் இந்த சாதுவின் உறைகளை கேட்டு மகிழ்வார். திரு அஸ்வினிகுமார் யோகி ராம்சுரத்குமார் அவர்களை சந்தித்தது குறித்தும் இந்த தமிழ் மொழிபெயர்ப்பு நூல் குறித்தும் தனது கருத்துக்களை அன்புரையில் வழங்கியுள்ளார. யோகி ராம்சுரத்குமார் இளைஞர் சங்கம் நடத்தியுள்ள சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி, யோகிராம் சுரத்குமார் ஜெயந்தி, போன்ற விழாக்களில் பங்குபெற்று பகவானின் பணிக்கு மிகவும் ஊக்கமும் தந்துள்ளனர் திரு அஸ்வினிகுமார் மற்றும் அவரது மனைவி, டாக்டர் பவானி அஸ்வினிகுமார். நூலின் ஆசிரியர் என்ற முறையில் எனது நன்றியை அவருக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

சாது ரங்கராஜன்]

 

எழுபதுகள் என்று நினைக்கிறேன். சென்னையில் நந்தனத்தில் இருந்த எங்கள் சிறு குடியிருப்பு இல்லத்தை நோக்கி, நிமிர்ந்த நன்னடையோடு தொளில் ஒரு வெளிர் நிற ஜோல்னா துணிப்பை தொங்க, வேஷ்டி அணிந்தபடி அழகுற அமைந்த தோற்றத்துடன், பாரதி சொன்ன ஒளிபடைத்த விழிகளுடன் கர்நாடக இசைவாணர்களின் இனிய குரலில், “என் பெயர் ரங்கராஜன், த. நா. குமாரசுவாமி இருக்கிறாரா ? ” எனப் பணிவான குரலில் வினவினார் வந்தவர். அன்னாருடைய தோற்றப்பொலிவினைக்கண்டவாறே, “அப்பா. உங்களைத்தேடி ஒரு சாது வந்துள்ளார் ” எனக்கூறிக்கொண்டே உள்ளே சென்று என் தந்தையாரை அழைத்துவந்தேன். வரவேற்ற பின் இருவரும் அமர்ந்து பல அறிய விஷயங்களைப் பேசி மகிழ்ந்தனர். பங்கிங் சந்திரரின் ‘ஆனந்த மடம்’ என்ற நவீனத்தை வங்காளி மூல மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்த வரலாற்றினை என் தந்தை கூற ‘வந்தே மாதரம்’ தந்த அந்த தேசபக்தி நூலினை சில மதவாத சக்தியினரின் கூச்சலுக்கு பயந்து பிரிட்டிஷ் அரசு தடை செய்ய முன்வந்ததினையும் தீரர் சத்தியமூர்த்தி அவர்கள் அந்நாள் சென்னை ராஜதானி மக்கள் சபையில் தீவிரமாகப் பேசி தடையினை தகர்த்த வரலாற்றினை உணர்ச்சி மேலிட விவரித்தார் என் தந்தையார் அவரிடம். ‘வந்தேமாதரம்’ நூற்றாண்டு விழா மலர் குழுவில் தான் நியமிக்கப்பட்டுள்ளது கூறிய ரங்கராஜன் அவர்கள் பங்கிம் – வந்தே மாதரம் தொடர்பாக ஒரு கட்டுரையை விழாமலருக்கு எழுதுமாறு பணித்தார். தந்தையார் ஒப்புதல் அளித்தபின், ரங்கராஜன்  வணக்கத்தை தெரிவித்து விட்டு விடை பெற்றார்.

 

அந்த சந்திப்பு நடந்து 10 ஆண்டுகள் கழித்து அவரை மீண்டும் எதிர்பாராத விதத்தில் சந்திப்பேன் என்று நினைக்கவில்லை. சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் சமயம் அது. திருவல்லிக்கேணி நடைபாதையில் பழைய புத்தகக் கடைகளில் தேடித் துழாவும் போது, எதிர்பாராதவிதமாக, சிற்றிதழ் ஒன்றில் சாது ரங்கராஜன் அவர்களின் முகவரி என் கண்களில் பட்டது மகிழ்ச்சியுடன் பொடிநடையாக அங்கிருந்து அருகிலேயே இருந்த பெரிய தெருவினை (Big Street) அடைந்தேன். கதவு இலக்கம் 118. முன்புறம் உள்ள பிரிண்டிங் பிரஸ்ஸில் விசாரித்தேன். மாடியில் இருப்பதாக சொன்னார்கள். குறுகலான வளைந்து சென்ற படிக்கட்டுகளில் ஏறி முதல் மாடிக்கு சென்றேன். லயன் வீடுகள் போன்ற சிறிய அறைகள் கொண்ட இல்லங்கள். ஒரு குறுகலான நடைபாதை அவற்றை வெளிப்புறத்திலிருந்து இணைத்தன. இடையில் உள்ள ஒரு இல்லத்தில், எளிய தோற்றத்தில், காஷாயம் தரித்து, நெடு வயதினை கடந்த தோற்றத்தில், சாதுஜி அமர்ந்திருந்தார். நான் 10 ஆண்டுகளுக்கு முன் சந்தித்த அதே தோற்றம். அதே ‘பளிச்’ கண்கள் ஆனால் தற்போது மூக்கு கண்ணாடிக்கு பின் அதே தீவிரத்துடன் ஒளிர்ந்தன . இடையிடையே சில நரை முடிகள் எட்டிப் பார்த்த ரிஷிகளின் தாடி. கோல்வால்கர் போல் பின்னுக்குத் தள்ளி விடப்பட்ட அடர்ந்த சிகை. நமஸ்காரம் செய்து கொண்டேன். பிறகு என்னை அறிமுகம் செய்து கொண்டேன். “அப்பா எப்படி இருக்கிறார்?” என அன்புடன் வினவினார். 1982-ல் காலகதி அடைந்துவிட்டதை குறிப்பிட்டேன். வருத்தப்பட்டார். மங்களூர் ஓடு போட்ட வீடு, அதை தாங்கிப் பிடித்தபடி மரவலிச்சல்கள் . பெரிய ஹால். பழைய மோஸ்தர் கதவுகள், ஜன்னல்கள், சில மர அலமாரிகள். அவற்றில் இந்திய இயல், ஹிந்து மதம் தொடர்பான பன்மொழி நூல்கள். கட்டுப் பிரிக்கப்படாமல் விநியோகத்திற்காக வைக்கப்பட்டிருந்த ‘தத்துவ தரிசனா’ இதழ்கள்.

 

இவற்றுக்கு இடையே ஒரு பாயில் சாது அவர்கள் சம்மணமிட்டு அமர்ந்திருந்தார். ‘ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்’ என முணுமுணுத்தபடி. அவருடைய பின்புறம் வெள்ளி தாடியுடன் விசிறி சிரட்டை கையில் வைத்தபடி பெரிய சுவாமிஜியின் கட் அவுட் லைஃப் சைஸில். அந்தப் பெரியவர் யார் என்று வினவினேன். யோகி ராம்சுரத்குமார் எனக்கூறி சுருக்கமாக யோகி அவர்களின் வரலாற்றை சொன்னார். அவரைப்பற்றிய சிறு நூலினை எழுதியுள்ளதாகவும் “கிளிம்ப்ஸஸ் ஒஃப் தி கிரேட் யோகி” என்ற ஆங்கில நூலின் சில ப்ரூஃப்களை என்னிடம் காட்டினார். வியந்தேன். இவ்வாறு தொடங்கிய தொடர்பு பல சந்திப்புகளால் வலுப்பெற்றது. அரிய வாய்ப்பு ஒன்று என்னை தேடி வந்தது. சாது அவர்களின் மகனுடன் திருவண்ணாமலையில் யோகியாரை என் மனைவி பவானியுடன் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. சன்னதி தெருவில் இருந்த இருப்பு கிராதி கதவுகள் போட்ட பழைய ஓட்டு வீடு. மணல் பரப்பப்பட்ட ஒரு சிறிய அறையில், சிகரெட் பெட்டிகள் சூழ்ந்த ஒரு இடத்தில், யோகி கையில் விசிறி சிரட்டையுடன் அமர்ந்திருந்தார். விவேக் அவர்கள் எங்களை யோகி யாருக்கு அறிமுகம் செய்து வைத்தார். லேசான புன்னகையுடன் என்னை நோக்கி கூர்ந்து பார்த்தார் அமைதியான இனம்புரியாத உணர்வு என்னை ஆட்கொண்டது சன்னமான குரலில் என்னை நோக்கி, “This beggar was called by a devotee who is going to undergo a delicate brain surgery in Chennai. I will sit for meditation and prayer, you please wait”, என்று சொல்லி தியானத்தில் அமர்ந்தார். சற்று நேரம் கழித்து, லேசாக கண்விழித்து, மெல்ல தியானத்திலிருந்து வெளிவந்தார். அதே மாறாப் புன்னகையுடன், ஒரு மாம்பழத்தை சற்று நேரம் உருட்டி தடவியபடி இருந்துவிட்டு பிரசாதமாக அளித்தார்.

தெளிவு குருவின் திருமேனி காண்டல்

தெளிவு குருவின் திருநாமம் செப்பல்

தெளிவு குருவின் திரு வார்த்தைக் கேட்டல்

தெளிவு குரு உரு சிந்தித்தல் தானே

 

— என்ற திருமூலரின் சத்திய வாக்கினை அன்று அனுபவ பூர்வமாக உணரும் பாக்கியம் எனக்குக் கிட்டியது. அவரிடமிருந்து விடைபெறும் முன், “திருவல்லிக்கேணியில் உள்ள சாதுவின் வீட்டில் இந்த பிச்சைக்காரன் எப்போதும் இருக்கிறேன். நீங்கள் அங்கேயும் என்னை தரிசிக்கலாம்” எனக் கூறி விடை கொடுத்தார்.

 

‘ஒரு மகாயோகியின் தரிசனங்கள்’ என்ற நூலின் வளர்ந்த வடிவத்தின் மொழிபெயர்ப்பினை அழகு தமிழில் பழகு தமிழில், மூலத்தின் சுவை குன்றாமல், மொழிபெயர்ப்பாளர் மொழியாக்கம் செய்துள்ளது சிறப்பு.

 

டாக்டர் ஜான்சன் என்ற ஆங்கில இலக்கிய மேதையின் வாழ்க்கை சம்பவங்களை தன் அனுபவங்களோடு பொருத்தி எழுதிய பாஸ்வெல்லின் நடையில் சம்பவ ச்செறிவுடன் வனையப்பட்டது இந்த நூல். சாதுஜி அவர்களால் தன்னுடைய அனுபவங்களையும், யோகியை சந்த்தித்த பலருடைய அனுபவங்களையும் விறுவிறுப்பான ஆங்கில நடையில் உலக மக்களுக்காக வனையப்பட்ட இந்த நூல், காலத்தினை விஞ்சி நிற்கும் என்றால் மிகையாகாது.மொழிபெயர்ப்பாளர் திரு ஸரஸ்வதி ஸ்வாமிநாதன் அவர்களும் சுவை குன்றாமல் எளிய தமிழில் அமைத்திருப்பது தமிழ் உலகத்து மக்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.

 

பின்னாளில் யோகியார் பற்றி ஆய்வுகளை மேற்கொள்வோருக்கு, சாதுஜியின் இந்த நூல் சமூக வரலாற்று, ஆன்மீக பின்னணியில் அமைந்த அற்புத களஞ்சியமாக கருவூலமாக திகழும். யோகி ராம்சுரத்குமார் பக்தர்கள், ஆய்வாளர்கள், தத்துவ ஆய்வுக்கூடங்கள் ஆகியவற்றில் அவசியம் இருக்க வேண்டிய பொக்கிஷம். ராமகிருஷ்ண பரமஹம்சர் பற்றி “எம் “என்ற பக்தர் வனைந்த வாழ்க்கை வரலாற்று நூலுடன் இந்த நூலினை ஒப்பிடத் தோன்றுகிறது. சாது ரங்கராஜனின் நூலினைப் படிக்கும் போது யோகியன் அருள் வீச்சினை வாசகர்கள் நிச்சயம் உணர்வார்கள் என்பதில் ஐயமில்லை.

அன்புடன்

. கு. அஸ்வினிகுமார்